Editors Note – May

Spread the love

டுலெட் – தரும் நம்பிக்கை

தென்னிந்திய திரையுலகத்தில் தமிழ்த் திரைப்பட உலகம் தனித்துவமானது.
பெருமுதலாளிகளும், அவர்களுக்கு இணக்கமான நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்,
நடிகைகளும் மட்டுமே தொடர்ந்து பயனடைந்துகொண்டே இருக்க உதவுவதும்,
அவர்களை மட்டுமே ஊடகங்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்துவது வழக்கம்.
மக்களுக்கான கலை, பொழுதுபோக்கு என்பது மாறி பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற
ஊடகங்களுக்கு செய்திகளை உற்பத்தி செய்துகொடுக்கும் வெறும் கச்சாப்பொருளாகவும்,
பெரும் வணிக நிறுவனங்களுக்கு ஆட்களைப் பிடித்துக்கொண்டுவரும் கவர்ச்சியான
கங்காணியாகவும் இன்றைய திரைத் துறை மாறிவிட்டது என்றால் மிகையல்ல.
ஒவ்வொரு காலத்திலும் இதுபோன்ற குழப்பங்கள் வளர்ந்து உச்சகட்டத்தை
அடையும்போது அது, வேலை நிறுத்தத்தில்தான் போய்முடியும். முந்தைய உதாரணங்கள்
பல உண்டு. பிறகு, ஒரு பேச்சுவார்த்தையும், உடன்பாடும். முடிவில் சரியாகவோ,
தவறாகவோ அடுத்த சில ஆண்டுகள் முன்னெடுக்கவேண்டிய ஒரு ஒப்பந்தம் – திட்டம்
நடைமுறைக்கு வரும். கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள்,
புதுப்படங்களை வெளியிடுவதில்லை என்ற போராட்டமும் இப்படித்தான் முடிவுக்கு
வந்துள்ளது. இதில் ஒரே மாற்றம், முன்பு தொழிலாளர்களும், தொழில்நுட்பக்
கலைஞர்களும் செய்துவந்த போராட்டம் இப்போது தயாரிப்பாளர்களின் தரப்புக்கு
தள்ளப்பட்டுவிட்டது. பாதிப்பு எங்கு இருக்கிறதோ அங்கிருந்தே அதற்கான தீர்வு பற்றிய
பேச்சுவார்த்தையும் ஆரம்பித்தாக வேண்டும். முடிவில் மீண்டும் திரைப்படங்களை
வெளியிட ஆரம்பித்திருப்பதும், வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர் சங்கம்
வரையறைப்படுத்தியிருப்பதும் நல்ல செய்திதான். இதை பெருநிறுவனப் படங்களுக்கும்
நடைமுறைப்படுத்தி சமன்படுத்தவேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பு.
இந்தச் சூழலில், 2017ம் ஆண்டுக்கான தமிழின் சிறந்த திரைப்படமாக, இயக்குநர்
செழியன் இயக்கியுள்ள “டுலெட்” திரைப்படம் இந்திய அரசின் விருதுபெற்றுள்ளது. சிறிய
பட்ஜெட் திரைப்படங்களில் போட்ட முதலீட்டை எடுக்க முடியுமா?, ஊடக கவனம் பெறுமா?
என்ற கேள்விகளுக்கு விடையளித்துள்ளது. வாழும் சமூகத்தைப் பற்றிய புரிதலோடும்,
அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் அக்கறையோடு அணுகுவதுமே
கலையின் நோக்கமாக இருக்கமுடியும். அதைத்தான் ‘டுலெட்” செய்துள்ளது.
சரியாக கிரகித்துக்கொண்டால், ‘டுலெட்’ திரைப்படத்திற்குக் கிடைத்த இந்த அங்கீகாரம்,
இந்த இரண்டு மாதப் போராட்டத்தின் காரணகர்த்தாக்களாகிய தயாரிப்பாளர்கள்மீது
பாய்ச்சியுள்ள சிறிய நம்பிக்கைக் கீற்று எனலாம். இருந்தாலும் குளிரூட்டப்பட்ட சூதாட்டக்
களத்திலேயே இருந்து பழக்கப்பட்ட நமது தயாரிப்பாளர்கள், கொளுத்தும் வெயிலில்
இறங்கி நடக்கும் பொறுமையற்றவர்கள். ஆனால் காலம் யாரையும் தொடர்ந்து ஒரே
இடத்தில் இருக்க விடுவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

மு.வேடியப்பன்
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *