Decaprio

Spread the love

ஆசிர்வதிக்கப்பட்ட அந்நியன்

தமிழில் தீபலக்ஷ்மி.ஜெ

 

‘உறுதியான வேர்களை உடைய மரத்தை காற்றால் ஒருபோதும் சாய்க்க முடிவதில்லை’ – லியனார்டோ டிகாப்ரியோ நடித்த ‘தி ரெவனன்ட்’ திரைப்படத்தில் வருகிற ஒரு வசனம் இது. இந்த ஒரு வரியை டிகாப்ரியோவின் வாழ்க்கையோடு ஒப்பிடலாம். ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கைப் போராட்டங்களை சந்தித்து வளர்ந்தவர். புறக்கணிப்புகளைக் கடந்தவர். இன்று ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநர்களின் முதன்மைத் தேர்வாக மாறியிருக்கிறார் டிகாப்ரியோ.

கடந்த பத்து வருடகாலங்களாக ஒவ்வொரு ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பின்போதும் டிகாப்ரியோவின் ரசிகர்கள் ஏமாந்து போனார்கள். விருது விழாவில் ஒரு பார்வையாளர் போல டிகாப்ரியோ சென்று வந்ததை சிலர் நகைச்சுவைப் பொருளாக்கினார்கள். சென்ற வருடத்திற்கான ஆஸ்கர் விருதினை ‘தி ரெவனன்ட்’ படத்திற்காக டிகாப்ரியோ வென்றதும் உலக அளவில் அவருடைய ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆஸ்கர் மேடையில் விருது பெற்றவர்கள் தரும் மரபான நன்றி நவிலும் பேச்சாக இல்லாமல் உலகின் மிக முக்கியப் பிரச்சனையான வானிலை மாற்றம் குறித்து  கவலைத் தெரிவித்து அதை நோக்கிய கவனத்தை ஈர்த்திருந்தார். 

வெவ்வேறு காலகட்டங்களில் டிகாப்ரியோ அளித்த பேட்டியின் சிறு தொகுப்பு இது.

 

  • லாஸ் ஏஞ்சலீஸின் கரடுமுரடான பகுதியில் தான் நீங்கள் வளர்ந்தீர்கள். சிறுவனாக இருக்கும்போதே ஒரு அந்நியனைப் போல அங்கு உணர்ந்ததாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஹாலிவுட்டிலும் இதே உணர்வு தொடர்கிறதா?

எப்போதும் நான் என்னை அந்நியனாகவே உணருகிறேன். நீங்கள் எப்போதாவது தொடர்ந்து அப்படி உணர்ந்திருக்கிறீர்களா? மார்டின் ஸ்கார்ஸியும் கூட அப்படி உணர்ந்திருக்கிறார். நியூயார்க்கின் தெருக்களில் இருந்து வந்த அவருக்கு ஹாலிவுட் எப்போதுமே சொந்தமான உணர்வைத் தந்ததே இல்லை. நான் சிறு பையனாக இருந்த போது நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும் ‘காஸ்டிங்’ இயக்குநர்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதை நினைவுகூர்கிறேன். அங்கு இருந்தவர்களிலேயே முற்றிலும் ஒரு அந்நியனாகவும் என்றுமே அந்தக் அந்த குழு எனக்கானது அல்ல என்பதையும் உணர்ந்திருந்தேன். ஒரு நாள் அவர்கள் என்னை நோக்கி கை நீட்டி ஆசிர்வதித்து, “நீ இந்த மேன்மையான குழுவில் இணையத் தேர்ந்தெடுக்கப்பட்டாய்என்று கூறுவதாய்க் கற்பனை செய்திருக்கிறேன்.

 

  • உங்கள் தொடக்க காலத் திரைப்படங்களைத் திரும்பிப் பார்க்கையில் மிகப் பிடித்தமானதாய் எதைக் குறிப்பிடுவீர்கள்?

திஸ் பாய்ஸ் லைஃப் படத்தைத் தான். 25 ஆண்டுகளுக்கு முன் எனது பதினைந்தாவது வயதில் நடித்த அந்தப் படத்தின் சின்னஞ்சிறிய அம்சமும் என் நினைவில் இருக்கின்றன. எல்லாமே எனக்குப் புதியதாய் இருந்தன. படப்பிடிப்புத் தளத்தில் ராபர்ட் டி நிரோவையும் அவரது அர்ப்பணிப்பையும் நேரில் கண்டது என் வாழ்வின் மிக முக்கிய அனுபவங்களில் ஒன்றாக அமைந்தது.

 

  • த ரெவனெண்ட்திரைப்படத்துக்காக நீங்கள் மிகுந்த சிரமங்களை மேற்கொண்டீர்கள். ஒரு காட்சியில் உங்கள் பாத்திரம் மிகுந்த பசியால் பச்சை ஈரலை உண்ண வேண்டி இருக்கும். உண்மையிலேயே அதைச் சாப்பிட்டீர்களா?

ஆமாம். ஏனென்றால் முதலில் கொடுக்கப்பட்ட போலி ஈரல் தத்ரூபமாய் இல்லை. அதில் நடித்த அமெரிக்கப் பூர்வகுடியான ஆர்தர் நாளெல்லாம் நிஜ ஈரலைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது நான் அமர்ந்து களிமண்ணால் செய்யப்பட்ட ஒரே ஈரலைச் சாப்படுவது போல் பாவனை செய்து கொண்டிருந்தேன். எனக்கு நிஜத்தை முயன்று பார்க்க வேண்டி இருந்தது. இரண்டே முறை தான் சாப்பிட்டேன். என் உண்மையான முகபாவனை தான் திரையில் வெளிப்பட்டது. அது தான் யதார்த்தம்.

  • அதிகாலையில் ஐந்து மணிக்கே எழுந்து இயற்கையோடு அதிகம் நேரம் செலவிடும் நபரா நீங்கள்?

ஐந்து மணிக்கே எழுந்து விடும் அளவுக்கு அல்ல, ஆனால் நிச்சயம் வெட்ட வெளியை அதிகம் விரும்பும் ஆள் தான். இயற்கையோடு அதிகம் இயைந்து இருப்பதையும் இவ்வுலகில் மனிதர்களால் இது வரை தீண்டப்படாத பரிசுத்தமான இயற்கை அழகு நிலவும் இடங்களுக்குச் செல்வதையும் மிக விரும்புவேன். பல்லாயிரம் மைல்களுக்கு மனித நாகரிகமே தென்படாத அமேசான் காடுகள் போன்ற இடங்களுக்குச் செல்வது மகத்தான ஆன்மிக அனுபவங்களுக்கு ஒப்பானது.

 

  • உங்கள் பயணங்களின் போது நீங்கள் பல முறை மரணத்தைத் தொட்டு மீண்டிருக்கிறீர்கள். தென்னாப்பிரிக்காவில் ஒரு முறை சுறா மீன் ஒன்றினால் தாக்கப்பட்டீர்கள். அதற்கு முன்பொரு முறை உங்கள் பாராசூட் விரியத் தவறிய அனுபவம் ஏற்பட்டது. அம்மாதிரியான தருணங்களில் உங்கள் மனவோட்டம் எப்படி இருக்கும்?

விசித்திரம் தான். அப்போது ஏற்படுவது மனித இயல்பின் அடிப்படையான உணர்வு தான். பரபரப்பான சாலையில் போக்குவரத்து காவல்துறையினரால் பிடிபடுகையில் ஏற்படும் உணர்வுக்கு நிகரானது அது.அடச்சே! இன்று இப்படி நிகழத்தான் வேண்டுமா? எனக்கு இளமையும் அழகான வாழ்வும் இன்னும் மிச்சமிருக்கிறதே. இப்படி நேர்ந்தது கொடுமையானது என்றே நினைத்தேன். வாழ்வதற்கான அடிப்படை உந்துதலைத் தாண்டி ஆழமான உணர்வுகள் ஏதுமிருக்காது.

  • ஆஸ்கர் விருதை வென்றது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உண்மையைச் சொல்லவா? படங்களில் நடிக்கும் போது அப்படி எதையுமே நான் சிந்திப்பதில்லை. விருது வாங்கும் ஒரே நோக்கத்துடன் எந்தவொரு செயலையும் செய்ததில்லை. ஒவ்வொரு முறையும் முழுமையாய் என்னை ஒப்புக் கொடுத்து இயன்றவரை சிறப்பாகச் செய்ய முயல்கிறேன்.Subscribe Now…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *