ரெவலேஷன்ஸ் : சமகாலமும் மாறிவரும் உறவுமுறைகளும்

Spread the love

ரெவலேஷன்ஸ் : சமகாலமும் மாறிவரும் உறவுமுறைகளும்

– சந்தோஷ் கொளஞ்சி

ஆண்Xபெண் இடையேயான உறவுச் சிக்கல்களை, மனப் போராட்டங்களை, அகம்Xபுறம் சார்ந்த அவஸ்தைகளை, கலாச்சார விழுமியங்களால் சிதைந்த மனித உணர்வுகளை தமிழ் சினிமா காட்சிப்படுத்தியது மிகக்குறைவுதான். சுயாதீன முயற்சியில் விஜய் ஜெயபால் இயக்கித் தயாரித்திருக்கும் ரெவலேஷன்ஸ் (Revelations) திரைப்படம், இந்த விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் வெகுஜன தளத்துக்கு இன்னும் வரவில்லை. பூஷன், Goteborg, MAMI, IFFK, நியூயார்க், பெங்களுரூ, புனே என, பல திரைப்பட விழாக்களில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மனித உணர்வுகள் வெளிப்படும் தருணங்களை, பண்பட்ட காட்சியமைப்பின்மூலம் பார்வையாளர்களுக்குக் கடத்தும் முயற்சியில் விஜய் ஜெயபால், தன் முதல் படத்திலேயே முயன்றிருப்பது தமிழ் சினிமா சூழலில் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பேசுவதற்கு தயக்கம்கொள்ளும் உளவியல் சிக்கல்களை விரிவுபடுத்தி, மெல்ல மெல்ல மொட்டவிழ்வதுபோல் அமைந்த காட்சிகள் மற்றும் எதை நோக்கி படம் செல்லவேண்டும் என்ற தெளிவும் கொண்ட படமாக ரெவலேஷன்ஸ் அமைந்துள்ளது. முறையான தொழில்நுட்பக் கலைஞர்களால் நேர்த்தியான ஒளியமைப்பு, படத்தொகுப்பு, ஒலிக்கலவை என்று அனைத்திலும் சிறந்த படமாக இப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் தொடக்கத்தில் மனோகர், சிலந்திக்கூட்டைக் கலைத்து ஒரு பாழடைந்த வீட்டினுள் நுழைகிறான். ஒரு எழுத்தாளனுடைய பணி அதுதானே, கூட்டைக்கட்டுவதும் பிறகு கலைப்பதும், கலைத்ததை நினைத்து வருந்துவதும் அதற்கான காரணங்களைத் தேடி தன்னைத்தானே நொந்துகொள்வதும் மீண்டும் கூடுகட்ட நினைப்பதும் என்று மனம்போனபோக்கில் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எத்தனை முயற்சிகளை அவன் மேற்கொள்வான்.
அங்கிருந்து ஆரம்பமாகும் அந்த உணர்வுப் போராட்டங்கள் படம் நெடுகிலும் விரவிக் கிடக்கின்றன. படத்தில் கதாபாத்திரங்கள் தமிழில் பேசிக்கொள்கின்றன. ஆனால் ஓர் சிறந்த உலக சினிமாவை பார்த்துக் கொண்டிருக்கும் அனுபவத்தை நமக்குத் தரக்கூடியதாக இருக்கிறது. ஜெயகாந்தன், அசோகமித்திரன், இளையராஜா என்ற பெயர்கள் கதாபாத்திரங்களில், உரையாடல்களில் இடம்பெற்றிருப்பது ஒரு வினோதத்தன்மையை அளிக்கிறது.

இப்படத்தின் கதாபாத்திரத்தின் வழியாக கதையைப் பார்ப்போம்…

மனோகர்

முதிர்ச்சியும் அனுபவமும் நிறைந்த இந்த கதாபாத்திரமானது, படத்தின் தொடக்கத்தில் காட்டப்படுவதுபோல தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்ளும் மனப்பக்குவத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் தன்னுடைய மிகையுணர்ச்சியை கொட்டிவிடாமல் நடுநிலையிலிருந்து அந்தக் கதாப்பாத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகள், நடுத்தரவயது இந்திய ஆண்களின் மனநிலையை ஒத்திருக்கிறது. கை, கால்கள் செயலிழந்த தன்னுடைய மனைவியின் அம்மாவை அழைத்துக்கொண்டு கொல்கத்தா நகருக்கு இடம்பெயரும் மனோகர், பழைய புத்தகங்கள் விற்கும் வேலையைச் செய்கிறார். வாழ்க்கையில் பெரிய விருப்பங்களற்று, மற்றவர்களின் தேவையைப் பூர்த்திசெய்யும்வகையில் வாழ்க்கையை வாழ திட்டமிட்டதைப்போல ஒரு தோற்றம். மனோகர் வீட்டிற்கு அருகில்தான் ஷோபாவும் குடியிருக்கிறாள். அவர்களுக்கிடையிலான உறவு, இருவரும் தமிழர்கள் என்பதில் தொடங்குகிறது. தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு அதனால் ஏழு வருட ஜெயில் வாழ்க்கையை வாழ்ந்த மனோகரிடம் பெருகிக்கிடக்கும் காமம், ஷோபாவின் மூலமாக மேலும் தூண்டப்படுகிறது. இருவரும் பரஸ்பர புரிதலுடன் இணையும்போதும் அவர்களுக்குள் இருக்கும் கலாச்சார நம்பிக்கைகள், கற்பிதங்கள், மேலும் குற்றவுணர்ச்சியை அவர்களிடையே எழுப்புகின்றன.

படத்தின் பிற்பகுதியில்தான் மனோகர் ஒரு எழுத்தாளர் என்பது ஷோபாவுக்குத் தெரியவருகிறது. அப்போது ஷோபாவுக்கு ஏற்படும் உணர்வுநிலைதான் பார்வையாளனுக்கும் கடத்தப்படுகிறது. ஒருகட்டத்தில், ஷோபாவின் தேவையை அறிந்த மனோகர், தன்னைக் கடந்துசெல்லும் ஷோபாவை விலகமுடியாமல் மாடியிலிருந்து எட்டிப்பார்ப்பதும், ஷோபாவின் கணவர் சேகருக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்புள்ளது என்று தெரிந்தும் எந்தவித உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் இருப்பதும், இறந்த மனைவிக்கு திதி கொடுத்துவிட்டு, தன் மாமியாரின்முன் மண்டியிட்டு அழுவதும் என்று, அந்தக் கதாபாத்திரத்தின்வழியாக சேத்தன், தன் நடிப்பின் முதிர்ச்சியை தனித்துவமாக வெளிப்படுத்துகிறார்.

“எங்க Divorceக்கு அப்புறம் ஏன் நீங்க ஷோபாவ கல்யாணம் பண்ணிக்கக்கூடாது…?” என்று, ஷோபாவின் கணவர் சேகர் மனோகரிடம் கேட்கும்போது, “ஷோபா Future-அ Decide பண்றதுக்கு நாம யாரு? அவங்களுக்கு என்ன தேவை, என்ன தேவையில்லன்னு அவங்களே முடிவு பண்ணிக்கட்டும்” என்று சொல்வதெல்லாம் அக்கதாபாத்திரத்தின் முதிர்ச்சியான நிலைதான்.

இப்படியாக, எத்தனைவிதமான உணர்ச்சிக் குவியல்கள் மனோகரிடம்! படம் பார்க்கிறோமா அல்லது மனோகரின் அகவுலகை அறிந்து, அவருக்கு உதவமுடியாமல் நம்மை நாமே சுயவிசாரணை செய்துகொண்டிருக்கிறோமா? என்பதையே அறியாத ஓர் நிலை நமக்கு ஏற்படுகிறது.

ஷோபா

குறிப்பிடத்தக்க அளவில், இங்கு பெண்கள் காலம்காலமாக அனுபவித்துவரும் பிரச்சனை ஷோபா என்ற கதாபாத்திரத்துக்கு. கணவர் சேகரால் உடலுறவு கொள்ள முடியாது என்றாலும் சேர்ந்து வாழவேண்டிய சூழ்நிலை. தன்னுடைய மாமியாரைப் பார்த்துக்கொள்ள ஆள் வேண்டும் என்று மனோகர், சோபாவிடம் கேட்க, “உங்களுக்கு ஓ.கே-ன்னா நானே அவங்கள பாத்துக்கட்டுமா…?” என்று மனோகரிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறாள். மூப்படைந்திருக்கும் ஒரு பெண்ணை, இவ்வளவு அக்கறையாக பார்த்துக்கொள்வதன்வழியாக, தன் கணவரிடம் பெற்றிடாத ஒரு உணர்வை மனோகரிடம் உணரும் தருணத்திலும், தன்னுடைய ஒரு தீண்டலின்மூலமாக தன் ஆசையை மனோகருக்கு வெளிப்படுத்தும்விதத்திலும் பரிதவிக்கிற பெண்ணாக ஷோபா இருக்கிறாள்.

உணர்வுகளால் தாங்கள் விரும்பும் காமத்தை வெளிப்படுத்தும் அந்தக் காட்சி ஒன்றுபோதும். ஷோபா – மனோகரின் உணர்வுநிலைக்கு எடுத்துக்காட்டாக. ஒரு கட்டத்தில், மனோகரிடம் பேசிக்கொண்டிருப்பதை தன் கணவர் சேகர் பார்த்ததும் தடுமாற்றத்தால் தவிப்பது, “என்னப் பார்த்தா உங்களுக்கு தேவடியாமாதிரி தெரியுதா?” என்று மனோகரிடம் கேட்கும்போது வெளிப்படும் கோபம், மனோகர் தன்னைத் தவிர்ப்பதையறிந்து தன்னால் என்ன செய்யமுடியும் என்ற இயலாமை நிறைந்த சோகம், விவாகரத்து கேட்கும் கணவனிடம் எதையுமே வெளிப்படுத்தமுடியாத ஆதங்கம் என்று, படத்தின் இறுதிவரை பல பரிதவிப்பான நிலையிலேயே அவள் இருக்கிறாள்.

சேகர்

பத்திரிகை துறையில் வேலைசெய்யும் சேகரிடம், சராசரி இந்திய இளைஞர்களின் மனநிலை தென்படுகிறது. அலுவலகத்தில் திவ்யாவுடனான நட்பு ஏற்படுகிறது. வேலை விஷயமாக பேசிப்பேசி இருவரும் நெருங்க ஆரம்பிக்கிறார்கள். தான் ஆண்மையற்றவன் என்று திவ்யாவிடம் வெளிப்படையாகப் பேசுமளவுக்கு நெருக்கம் ஏற்படுகிறது. தன் மனைவியிடம் வெளிப்படையாக பேசமுடியாத விஷயங்களை திவ்யாவிடம் பேசி, கண்ணீர் வடித்து, தன் மனப்போரட்டங்களை சமாளிக்கமுடியாமல் தவிக்கிறான் சேகர்.

திவ்யா அருகில் இல்லாதபோது அவள் மொபைலுக்கு வரும் அழைப்பை சந்தேகத்துடன் எடுத்துப்பேசுவதும் திவ்யாவைப் பற்றி அலுவலகத்தில் நண்பர்கள் தவறாகப் பேசும்போது, தனக்கு நேர்ந்த நம்பிக்கை துரோகத்தை வெளிக்காட்டமுடியாமல் உணர்வுகளை அடக்கிக்கொண்டு திவ்யாவின் வீட்டுக்குச் செல்வதும், விவாகரத்து தந்த மனைவி ஷோபா, ஊருக்குப் போகும்போது எந்தவித உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் அவள் போகும்வரை காரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதும், இப்படியாக பல தவிப்புகளை சுமந்துகொண்டு வாழும் அவனுக்கு ஆறுதல் தேவை என்று பார்வையாளருக்கு தோன்றுவதை தவிர்க்கமுடியாது.

திவ்யா

கொல்கத்தா நகரத்தில் பிறந்து வளர்ந்த திவ்யா, தனது அறைத் தோழியுடன் வசித்து வருகிறாள். பெரிதாக உறவுமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவள் இல்லை, தனக்கு அவ்வப்போது பண உதவி செய்யும் சேகருக்கு, தன்னால் முடிந்ததைச் செய்ய நினைத்து, அவனை அறைக்கு அழைத்து உறவுகொள்ள நினைக்கிறாள். எந்தவித கலாச்சார நம்பிக்கைகளுக்கும் அடங்காத பெண்ணாக சித்திரிக்கப்பட்டிருக்கிறது இக்கதாபாத்திரம்.

சேகர் – திவ்யா உறவின் மூலம் திவ்யாவிடமிருந்து பிரிவை உணரும் அவளது அறைத்தோழியின் மனவுணர்வு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். திவ்யாவுக்கும் அவளது தோழிக்கும் இடையேயான ஒருபால் உறவு பற்றியும் அதைக் காட்சிப்படுத்தியவிதமும் நவீன யுகத்தின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். திவ்யாவிற்குத் தேவைப்படுவது உடல் இன்பமா, அதைப் பயன்படுத்திப் பெறுகிற பணமா அல்லது இரண்டும்தானா என்பதைப் பற்றிய புரிதலை அவள் நமக்குத் தருவதில்லை. ‘தனக்கு எது தேவையோ அதற்காக வாழ்தலே வாழ்க்கை’ என்ற அடிப்படையில்தான் அவளுடைய வாழ்க்கை அமைகிறது.

இதுமாதிரியான கலவையான உணர்வுநிலைகளை நான்கு கதாபாத்திரத்தின்வழி பார்வையாளனுக்குக் கடத்துவதன்மூலம் பார்வையாளன், தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொண்டு தெளிவுபெற வாய்ப்புண்டு. எந்தவித முடிவுகளையும் பார்வையாளனிடம் திணிக்காமல், இந்த மனிதர்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள். இங்குதான் வாழ்கிறார்கள். அவர்களை நான் காட்சிப்படுத்திவிட்டேன். அவர்களில் நீங்கள் யார்? நீங்கள், அந்தக் கதாபாத்திரத்தோடு உங்களை எங்கு அடையாளம் காண்கிறீர்கள்? என்ற கேள்வியை மட்டுமே இயக்குநர் நம்மிடம் எழுப்புகிறார்.
இயக்குநரின் இலக்கியப் பரிச்சயத்தை அவரது தேர்ந்த காட்சியமைப்பின்மூலம் நாம் தெளிவாக உணரமுடிகிறது. இறுதியில், அந்தப் பின்னணி இசையுடன்கூடிய காட்சியமைப்பு, கதாபாத்திரத்திற்குள் இருக்கும் இனம்புரியாத, தாங்கிக்கொள்ளமுடியாத பாரத்தை நமக்களிக்கிறார்.

மிதந்துகொண்டிருக்கும் கப்பலில் தன்னுடைய வாழ்வின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கும் மனோகர், தான் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து, தன்னைக் கடந்து சென்ற மனிதர்களை நினைத்து, அமைதியான நிலையில் பாலத்தின் விளிம்பில் நிற்கும் சேகர், தெளிவும் குழப்பமுமாக மனோகர் எழுதிய புத்தகத்தை படிக்கநினைக்கும் ஷோபா, தன் தோழியுடன் ஓரினச்சேர்க்கையில் இருப்பதைப் பார்த்த சேகரிடம், தன் நிலையை சொல்ல நினைக்கும் திவ்யா இவர்கள் அனைவரும் நம் நினைவிலிருந்து அகல மறுக்கின்றனர்.

புத்தகங்களோடு தனிமை நிறைந்த வாழ்க்கையை வாழும் மனோகரின் கதாபாத்திரத்தை, தமிழ்த் தொலைக்காட்சிகளில் பார்த்துப் பார்த்து சலித்துப்போன நடிகர் சேத்தன்மூலம் நுணுக்கமான காட்சி விவரிப்புகளைக் கொண்டு அவரின் வேறொரு முகத்தை நமக்குக் காட்டுகிறார் இயக்குநர். சேத்தனின் நடிப்பு உலக அரங்கில் கண்டிப்பாக கவனிக்கப்படும்.

தன் வீட்டுக்கு அருகில் குடிவரும் மனோகரிடம் பேசத் துடிக்கும் ஆர்வம், அடுத்தடுத்த சந்திப்புகளில் மனோகரிடம் பேசிவிட்டோம் என்ற மகிழ்ச்சியை கண்களால் வெளிப்படுத்துவது, மனோகரின் மாமியருடன் பூங்காவில் அமர்ந்திருக்கும் காட்சி என்று ஷோபா கதாபாத்திரத்தின்வழி லக்ஷ்மி வெளிப்படுத்தும் நடிப்பு மகத்தானது.

ஷோபாவிடம் பேசமுடியாத, தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தமுடியாத சேகரின் கதாபத்திரமாக அனந்தராம் கார்த்திக் மிகையற்ற நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார்.

மனித மனம் எப்போதுமே முரண் நிறைந்தது. ஒரு தேவையை அடிப்படையாகக் கொண்டு இன்னொரு தேவை, மனித வாழ்க்கை முழுவதும் நிரம்பிக் கிடக்கிறது. அதில் காமத்தின் பங்கு அதிமுக்கியமானது, இந்தப் படம் நமக்கு அதை உணர்த்துகிறது.


(கட்டுரையாளர் – காட்சி ஊடகவியல்துறை மாணவர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *